×

அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கு மியாமி நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்: குற்றச்சாட்டுகளை மறுத்தார்

வாஷிங்டன்: அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் மியாமி நீதிமன்றத்தில் ஆஜரான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அமெரிக்க அதிபராக கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை டிரம்ப் பதவி வகித்தார். அவர் பதவிக்காலம் முடிந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகையில், அரசின் ஆவணங்களை எடுத்து சென்று தனது வீட்டில் மறைத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது வீட்டில் எப்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 100க்கும் மேற்பட்ட அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக டிரம்ப் மீது மியாமி நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக டிரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் உள்ள மியாமி நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் போலீசாரிடம் சரணடைந்த அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விசாரணை தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக நீதிமன்றத்துக்கு வந்த டிரம்ப், நீதிபதி வரும்வரை காத்திருந்தார். விசாரணையில், உளவு சட்டத்தின் விதிகளை மீறியது உட்பட 37 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது டிரம்ப் வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு டிரம்ப் குற்றமற்றவர் என வாதிட்டார். 45 நிமிடங்கள் நடந்த விசாரணையில் டிரம்ப் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். இதைத் தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தனது பிறந்தநாளில் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிடுவதை பாதிக்காது
2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக இரண்டாவது முறையாக டிரம்ப் போட்டியிடுகின்றார். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவாகும். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் டிரம்புக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. எனினும் இந்த வழக்கு அவர் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறாக இருக்காது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை பல மாதங்கள் நடைபெறலாம் என்பதால் அவர் சுதந்திரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகின்றது.

The post அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கு மியாமி நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்: குற்றச்சாட்டுகளை மறுத்தார் appeared first on Dinakaran.

Tags : Trump ,Miami ,court ,Washington ,US ,President Donald Trump ,Dinakaran ,
× RELATED டிரம்ப் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு